கணினியின் பயன்பாடுகள் வளர்ந்துவருவதில் பல முக்கியமான பயன்கள் மக்களுக்குக் கிடைத்துவருகின்றன. அதில், நமது எண்ணங்களை நொடிப்பொழுதில் உலகெங்கும் தெரியபடுத்துகின்ற சமூக வலைதளங்களும் ஒன்று. சமூக வலைதளங்களில் மிகவும் முக்கியமான இணையதளம் ‘ பேஸ்புக்’, இதில் பலவகையான பக்கங்கள் (Pages) உள்ளன. நமது விருப்பத்திற்குத் தகுந்தாற்போல் நாம் ஒருபக்கத்தினை லைக்ஸ் செய்தால் அந்தப் பக்கத்தில் பதியப்படும் பதிவுகள் நேரடியாக நமது கணக்கிற்கு வந்துவிடும். இதுபோல் நாம் பிடித்தவை என்று குறித்து வைத்திருக்கும் பக்கங்களை வைத்தே நாம் எப்படிப்பட்டவர்கள் என்று கணித்துச் சொல்லும் ஒரு பேஸ்புக் பயன்பாட்டினை (App) வல்லுநர்கள் வடிவமைத்துள்ளார்கள். இதன் பெயர் ‘myPersonality’. இதன் மூலம் நம் குடும்பத்தினரைவிட அல்லது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களைவிட நம்மைப் பற்றி தெளிவாக கணித்துக்கூற முடியுமாம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகம் ஆகிய இரு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து இந்த பயன்பாட்டினை உருவாக்கும் முயற்சியின் பின்னணியில் இருந்தனர். பேஸ்புக் கணக்கில் நமக்கு இருக்கும் லைக்ஸ் மற்றும் இதர கேள்விகளைக் கொண்டு நமது குணாதிசயங்கள் எப்படியிருக்கும் என்று கணித்துக் கூறுவதுதான் இந்த பயன்பாட்டின் முக்கியச் செயல்.
இந்த myPersonality பயன்பாடு மற்ற நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யும்படியாகவும் அமைந்திருப்பதால், இதைப் பிடித்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த பயன்பாட்டினை பரிந்துரை செய்தனர். இப்படி பரிந்துரை செய்தவர்களால் பலர் இந்த பயன்பாட்டினை பயன்படுத்தினர். இதில் சுமார் 17000 க்கும் மேற்பட்டவர்கள் ஒரு நண்பர் அல்லது உறவினரால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர் மற்றும் 14000 க்கும் மேற்பட்டவர்கள் இரு நண்பர்களால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். இந்த ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த பேஸ்புக் பயன்பாடு நம்முடன் இருக்கும் உறவினர், குடும்பத்தினர் அல்லது நண்பர்களைக் காட்டிலும் நம்மைப் பற்றி தெளிவாக ஊகித்துக் கூறுவது தெரியவந்தது.இந்த ஆய்வில் சுமார் 86,220 மக்களை பேஸ்புக்கில் இருந்து தேர்வு செய்தனர். அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன, இந்தக் கேள்விகள் அனைத்தும் ‘myPersonality’ பயன்பாட்டின் துணையுடன் கேட்கப்பட்டன, அத்துடன் அவர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அணுகவும் ஒப்புதல்கள் வாங்கப்பட்டன. கேள்விகளின் முடிவில் பேஸ்புக் பயன்படுத்துபவரின் வெளிப்படைத்தன்மை, நேர்மை, மனப்பாங்கு, ஒத்துப்போதல் மற்றும் நடுநிலைத் தன்மை போன்ற ஐந்து வகையான குணாதிசயங்களின் மதிப்பெண்கள் பட்டியலிடப்பட்டன. உதாரணமாக நீங்கள் தியானம் குறித்த ஒரு பக்கத்தினை விரும்பியிருந்தால், அது உங்களின் வெளிப்படைத்தன்மை குணத்தில் சிறிது மதிப்பெண்களைக் கொடுக்கும்.
மேலும் உங்கள் பேஸ்புக் கணக்கில் இருக்கும் 70 லைக்ஸைக் கொண்டு உங்கள் நண்பனை விடவும், 150 லைக்ஸைக் கொண்டு உங்கள் பெற்றோர்களை விடவும், 300 லைக்ஸைக் கொண்டு உங்கள் மனைவியை விடவும் உங்களைப் பற்றி கூறமுடியும் என இதுகுறித்த ஆய்வு தெளிவுறக் கூறியுள்ளது.
சராசரியாக, உங்கள் பேஸ்புக் கணக்கில் நீங்கள் 227 பக்கங்களை லைக் செய்திருந்தாலே உங்களைப் பற்றிய முழு விவரங்களையும், குணங்களையும் கூற முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அறிவியலின் அதிசயங்கள் நாளுக்கு நாள் முன்னேறி வருவதற்கு இதைவிட பெரிய சான்று எதுவும் தேவையில்லை.
Post a Comment